சி.ஏ.ஏ, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு பாமக எதிர்ப்பு..! பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது உறுதி??

Prasanth Karthick

புதன், 14 பிப்ரவரி 2024 (13:35 IST)
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக – பாமக இடையே பேச்சுவார்த்தை இழுபறி தொடர்ந்து வந்த நிலையில் தற்போது மத்திய பாஜக அரசின் திட்டங்களை எதிர்த்து பாமக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக – அதிமுக – பாஜக என மூன்று கட்சிகளின் தலைமையில் மும்முனை கூட்டணி நிலவும் சூழலே உள்ளது. அதிமுக கூட்டணிக்கு ஆரம்பத்தில் மாநில கட்சிகள் சில ஆர்வம் காட்டாத நிலையில் பாஜகவுடனான பேச்சுவார்த்தையிலும் சுமூகம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அப்படியாக பாமகவுக்கு பாஜகவுடான பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது. கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் பாமக கேட்கும் நிலையில் பாஜக சரியான ரெஸ்பான்ஸ் தரவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வரும் நிலையில் தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.

ALSO READ: ''அவர்கள் விவசாயிகள்... கிரிமினல்கள் அல்ல''- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் ஆதரவு

இதற்கிடையே இன்று சென்னையில் நடைபெற்ற பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை விழாவில் அன்புமணி ராமதாஸ் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் “நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தேன். என்றாலும் மக்கள் நலனிற்காக இந்த சட்டம் செயல்படுத்தப்பட கூடாது என பாமக தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல யோசனையாக இருந்தாலும், அதை செயல்படுத்துவதில் நிறைய சிரமம் உள்ளது” என பேசியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் நிலைபாட்டை விரைவில் பாமக அறிவிக்குமென அவர் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு மாநிலங்களவை எம்.பியாக ஆதரவு அளித்த அன்புமணி ராமதாஸே தற்போது அந்த திட்டங்களுக்கு எதிரான நிலைபாட்டை பதிவு செய்துள்ளதால் பாஜக – பாமக கூட்டணிக்கான வாய்ப்புகள் குறைவே என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்