குடி பழக்கத்திலிருந்து விடுபட யோகா உதவி செய்கிறது - பள்ளிகளில் யோகா பயிற்சி வழங்கப்பட வேண்டும் - அண்ணாமலை

J.Durai

வெள்ளி, 21 ஜூன் 2024 (12:43 IST)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
 
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
 
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணத்தை குறிப்பிட்டு குடி போதையில் இருந்து விடுபட யோகா பயிற்சி உதவி செய்யும் என கூறினார். 
 
மேலும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது,
 
'இன்று சர்வதேச யோகா தினம் 193 நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி முதல் உலக மக்கள் அனைவராலும் வாழ்வின் ஒரு அங்கமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 
இது நமது மண்ணைச் சேர்ந்த கலை என்பதற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். யோகா கலையின் தனித்துவமான கிரியா யோகா எனும் உடலின் ஆற்றலை ஒருங்கிணைக்கும் பயிற்சியை இன்று ஈஷா மையத்தில் பாஜக நிர்வாகிகளோடு மேற்கொண்டேன். இதனை 2014 ஆம் ஆண்டு முதல் நான் பயிற்சி செய்து வருகிறேன்.செல்போன் பயன்பாடு, சோசியல் மீடியா ஆதிக்கம் ஆகியவை அதிகரித்து வரும் சூழலில் மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்கு அதுவே ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. இவற்றில் இருந்து விடுபட்டு மனநல ஆரோக்கியம் பெற யோகா உதவி செய்யும்' என தெரிவித்தார்.மேலும் பேசியவர், தேசிய கல்விக் கொள்கையின் படி பாடத்திட்டத்தில் குறைந்தது 20% Indian Knowledge System எனும் அடிப்படையில் நமது நாட்டின் அறிவு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. அதில் யோகா பயிற்சி முதன்மையானதாக உள்ளது.
 
பள்ளி கல்வித்துறை யோகா பயிற்சியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்கு யோகா ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மது மற்றும் கெமிக்கல் வகை போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், போதை பழக்கத்தில் இருந்து விடுபட யோகா பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, யோகா பயிற்சியினை மேற்கொண்டு உடல்நலம் மனநலத்தை பாதுகாத்திட வேண்டும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலரும் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் தான் பணம் கொடுக்கப்படுகிறது. ஈம காரியம் செய்ய கூட அவர்களிடம் பணம் இல்லை. அந்த குடும்பங்கள் கஷ்டத்தில் இருந்து வெளியே வரவே நிதி உதவி செய்கிறோம். 
 
பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. பாஜக சார்பிலும் ஒரு லட்சம் அறிவிதுள்ளோம்.தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை. எனவே, கள்ளு கடைகளை கொண்டு வரும் நேரமிது. குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையாக கள்ளு கடைகள் திறக்க வேண்டும்.
 
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை முதலில் 1000 கடைகள் அடைக்கப்பட வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும்' என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்