வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:03 IST)
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது.
எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து வைரமுத்து மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர் அவர்கள். ஆண்டாள்-வைரமுத்து விவகாரம் முடிவே இல்லாமல் தொடர் சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வைரமுத்து தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி கருத்துக்களை நீதிபதி கூறியுள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து கூறியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
ஆராய்ச்சி கட்டுரையை தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார். அவரது சொந்த கருத்தாக அவர் அதை கூறவில்லை. விஎச்பி மற்றும் அரசியல் கட்சிகள் தான் இந்த விவகாரத்தை பெரிதாக்குகின்றன என வைரமுத்து தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம். வைரமுத்து மீது இதுவரை இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.