கருணாஸ் வழக்கை அவசர வழக்காக எடுக்க முடியாது: நீதிமன்றம் அதிரடி

வியாழன், 4 அக்டோபர் 2018 (08:07 IST)
திருவாடனை எம்.எல்.ஏ கருணாஸை நெல்லை போலீசார் கைது செய்ய முயற்சித்து வருவதாகவும், அதற்காகவே கருணாஸ் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ள நிலையில் கருணாஸ் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெற்கட்டும்செவல் என்ற பகுதியில் நடைபெற்ற புலித்தேவன் பிறந்த நாள் விழாவில், கருணாஸ் தரப்பிற்கும், தமிழ்நாடு தேவர் பேரவையை சேர்ந்த முத்தையா தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார் நேற்று சென்னை வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் கருணாஸை கைது செய்யாமல் இருக்க, அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்த மனு வரிசைப்படி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், நெல்லை போலீசார் சட்ட விரோதமாக கருணாஸை கைது செய்ய முயற்சிப்பதாகவும், எனவே இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர், கருணாஸை கைது செய்யும் எண்ணம் இல்லை என நீதிபதியிடம் தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி, பட்டியலிட்டபடி நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்