தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு வரிப்பணம் கொடுக்கிறோம், எங்களுக்கு திருப்பி சரியான முறையில் கொடுப்பதில்லை என்கிற வாதமே தவறு என சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இங்கே ஒரு வாதம் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டில் இருந்து வரிப்பணம் நாங்கள்தான் அதிகமாக கொடுக்கிறோம். ஆனால், "நாங்கள் கொடுப்பது ஒரு ரூபாய் என்றால், நீங்கள் ஏழு பைசா கூட கொடுக்கவில்லை" என்று சிலர் புலம்புகிறார்கள். இந்த தரவுகள் எல்லாம் எங்கே இருந்து எடுக்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.
நாட்டின் 25% முக்கிய தொழிற்சாலைகள் இங்கேதான் உள்ளன. அதனால், அதற்குண்டான வருவாய் இந்தியா முழுவதற்கும் சொந்தமானது. எனவே, "நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம், எங்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள்?" என்ற வாதமே தவறு. அவர்கள் எடுக்கும் கணக்கீடு எங்கே இருந்து வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை.
சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்துதான் தமிழக அரசுக்கு அதிக வருவாய் வருகிறது. அதனால், "அரியலூருக்கும் கோவில்பட்டிக்கும் எங்கள் பணத்தை கொடுக்கக் கூடாது" என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இதுவும் இருக்கிறது. அவர்களின் வாதம் பாரதத்திற்குள் பொருந்தாது. எல்லா மாநிலங்களுக்கும் சமமாக பகிர்ந்துதான் நிதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்தார். "தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதை நீண்ட காலமாக எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களின் நிலை என்ன என்பதைக் நிர்மலா சீதாராமன் சிந்தித்து பார்க்க வேண்டும்" என்றும் கூறினார். மேலும், "தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.