மெட்ரோ பணிகளுக்காக சுமார் 21,000 கோடி நிதி இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்தாமல் அதை வைத்து அரசியல் செய்து வரும் திமுக அரசை அம்பலப்படுத்தி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பி வந்த திராவிட மாடல் அரசின் உண்மை முகம் !
நமது மத்திய அரசு, சென்னை மெட்ரோ Phase 2 திட்டத்திற்கு தேவையான நிதியில் சுமார் ரூ.21,560 கோடி வரையிலான கடனுதவிகளை தமிழக அரசுக்கு பெற்று கொடுத்த பின்னும், இதுவரை அதில் வெறும் ரூ.5880 கோடியை மட்டும் தமிழகம் செலவழித்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள்.
2015- இல் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோ Phase1 திட்டமானது முழுக்க மத்திய அரசு திட்டமாக அறிவிக்கப்பட்டு, 2019-இல் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு தற்போது தினசரி 4 லட்சம் பேர் பயணிக்குமளவிற்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால், 2018-இல் ஆரம்பிக்கப்பட்ட 118 கிலோ மீட்டரை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ Phase 2 திட்டத்தை முழுக்க முழுக்க தாங்களே செயல்படுத்திக் கொள்வதாக கோரிக்கை வைத்த தமிழகம், பின்பு சர்வதேச வங்கிகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுத் தருமாறு நமது மத்திய அரசின் உதவியை நாடியது.
அந்த வகையில், 2018 முதல் 2023 வரை பல்வேறு சர்வதேச வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, சுமார் ரூ.21,560 கோடி நிதியுதவி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து வெறும் ரூ.5880 கோடியை மட்டும் செலவு செய்து, மெட்ரோ பணியை தாமதப்படுத்தியுள்ளது இந்த திராவிட மாடல் அரசு.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும், போதுமான நிதியுதவி வழங்கப்பட்ட பிறகும், சென்னை மெட்ரோ Phase 2 பணிகளை தாமதப்படுத்துவதன் நோக்கம் என்ன?
“மாநில திட்டமாக செயல்படுத்திக் கொள்கிறோம்” என்று கோரிக்கையை வைத்துவிட்டு, பின்னர் மத்திய அரசு உதவியோடு கணிசமான நிதியை பெற்றுவிட்டு மத்திய அரசை பழிப்பது ஏன்?
சென்னை மெட்ரோ Phase 2 திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இதுவரை செலவிடப்பாடாத மீதி நிதி என்னானது?
எனவே, வார்த்தைக்கு வார்த்தை “மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை” என்றும் “ மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது” என்றும் பொய்களைப் பரப்பும் தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மத்திய நிதியமைச்சரின் கேள்விகளுக்கும் தமிழக மக்களின் கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க வேண்டும் என்று, தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறோம்.