கோவையில் செய்தியாளரிடம் பேசிய அவர், ஜிஎஸ்டியை எளிமைபடுத்துவதற்கும், மக்கள் மீது அதிக வரி விதிக்காமல் இருப்பதற்கும் முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் உறுப்பினராக உள்ளனர் என்றும் கடந்த 7 ஆண்டுகளில், கவுன்சிலில் அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் மத்திய அரசு மூலம் நல்ல திட்டங்கள் நிறைவேறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் அந்தத் திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கிவிடுகின்றன என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். வெளிநாட்டில் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து கொண்டு, தேசநலனுக்கு எதிராக ராகுல் காந்தி பேசி வருவதாகவும், தனது தோழமைக் கட்சியைக் கண்டிக்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு தேசபக்தி இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல், டீசல் ஆகியவை 'எனாபிளிங் புரவிசன்' என்ற அடிப்படையில் ஏற்கனவே, ஜி.எஸ்.டி. வரையறைக்குள் உள்ளது என குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு, வரி வரம்பை நிர்ணயத்தால் உடனே அமல்படுத்தத் தயார் என்று கூறினார்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய அவர், தமிழகம் மட்டுமல்ல, எந்த மாநிலம் முதலீட்டை ஈர்த்தாலும் அது வரவேற்கத்தக்கது என்றார். தமிழகத்திற்கு எந்த அளவுக்கு முதலீடு வருகிறது என்பதை பிறகு பார்க்கலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.