நந்தினியின் வளர்ப்பு சரியில்லை: அதிமுக நிர்மலா பெரியசாமி அநாகரிக பேச்சு!

திங்கள், 6 பிப்ரவரி 2017 (12:11 IST)
கடந்த டிசம்பர் மாதம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற 16 வயது இளம்பெண் இந்து முன்னணியை சேர்ந்த கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, பிளேடால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக பேசிய அதிமுக நிர்மலா பெரியசாமி நந்தினியின் வளர்ப்பு சரியில்லை என அவரை விமர்சித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நந்தினியின் கொடூர மரணத்திற்கு பின்னர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரபல தனியார் செய்தி சேனல் ஒன்று நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் சமூக ஆர்வலர்களுடன் அதிமுகவின் நிர்மலா பெரியசாமியும் கலந்துகொண்டு பேசினார்.
 
அதில் பேசிய அவர், இது கொடூரமான கொலைதான் நந்தினியை அவரது பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை என்றார். ஆதிக்க சாதி பையனை காதலித்திருக்கிறாள். கர்ப்பமாக இருந்திருக்கிறாள். இதை ஏன் பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இப்போது நீதி கேட்பவர்கள் முன்பே ஏன் கவனிக்கவில்லை என்றார்.
 
நிர்மலா பெரியசாமியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இது நந்தினிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா என்று கேட்டனர். நிர்பயாவுக்காகவும் ஸ்வாதிக்காகவும் முன்வந்து செயல்படுபவர்கள் ஏன் கல்பனாக்களுக்கும் நந்தினிகளுக்கும் முன் வருவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
 
கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு தங்கள் பிள்ளையை இழந்திருக்கும் அந்த பெற்றோர்களையே மீண்டும் குற்றம் சொல்லுவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்புவது, அவரது வளர்ப்பு குறித்து விமர்சிப்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் என பலரும் நிர்மலா பெரியசாமிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்