தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் தொழில்கள் - 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

திங்கள், 20 ஜூலை 2020 (15:39 IST)
தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் தொழில்கள் தொடங்க முதல்வர் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 
 
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி முன்னிலையில், தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இத்திட்டங்களின் மூலம், சுமார் 13,507 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில்,  தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும்  தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
 
மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது,   தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. 
 
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் தொலைநோக்குப்  பார்வையுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்திய இது போன்ற பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
மும்பையைச் சேர்ந்த, ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற நிறுவனம், கோவிட் - 19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.  
 
27.5.2020 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, ஃபின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன். 15,128  கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.  இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 
அதன்  தொடர்ச்சியாக,  தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் இன்று 8 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  தற்போது  நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 8 திட்டங்களில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்