நீட் விலக்கு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..! பாஜக வெளிநடப்பு..!!

Senthil Velan

வெள்ளி, 28 ஜூன் 2024 (13:27 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
 
சட்டசபையில் இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், மருத்துவத்துறையிலும் பல சுகாதாரக் குறியீடுகளிலும் நாட்டிற்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்வதாகவும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறை தான் இந்த சாதனைகளுக்கு அடிப்படை காரணம் என தெரிவித்தார். 
 
2017ம் ஆண்டில் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதாக கூறிய முதலமைச்சர், மருத்துவ படிப்பு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளதாகவும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் தேர்வில் வெல்ல முடியவில்லை என்றும், நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். 
 
நீட் தேர்வு தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.
 
தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். 

ALSO READ: நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி.! முடங்கிய நாடாளுமன்றம்..!!
 
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்