பிரேக்கிங் நியூஸ் போட எம்எல்ஏ சரவணனை சிக்க வைத்த மூன் டிவி!

வெள்ளி, 16 ஜூன் 2017 (10:16 IST)
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க பல கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், பேரம் பேசப்பட்டதாகவும் எம்எல்ஏ சரவணன் பேசிய வீடியோ மூன் டிவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இந்த பேர விவகார வீடியோ தமிழக சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் இந்த முயற்சியை மேற்கொண்ட மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாஸ் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
 
அதில் தான் எதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறிய காரணம் கீழே.
 
கடந்த ஆறு மாதங்களாக எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில் தொடங்கி எல்லார் மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அவர் மரணத்தில் என்ன நடந்தது? ஓ.பன்னீர்செல்வம் எதற்கு வெளியே வந்தார், கூவத்தூரில் என்ன நடந்தது? எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார். இது எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ஹிடன் அஜெண்டா இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிகிறது.
 
ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இதை வேறுவிதமான பரப்ரப்புக்குதான் பயன்படுத்திக் கொண்டதே தவிர, அந்த ஹிடன் அஜெண்டாவின் ஆதாரத்தை தேட முயற்சிக்கவில்லை. பிரேக்கிங் நியூஸ் என்பதன் அர்த்தமே இந்த ஆறு மாதங்களில் மாறிப் போய்விட்டது.
 
ஒருத்தர் இன்னொருத்தரின் வீட்டுக்குப் போனால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. இவர் ஏதாவது பேசினால் அது பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அந்த பிரேக்கிங் நியூஸ் வரவே இல்லை.
 
நாமும் இருபது வருடமாக பத்திரிக்கை உலகத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது என்ற ரியல் பிரேக்கிங் நியூசை கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்தான் இந்த ஆபரேஷனுக்குக் காரணம். இதை ஆரம்பித்தோம் என்று சொல்வதைவிட இதில் இறங்கியபோது ஒரு பொறி கிடைத்தது. அதைப் பிடித்துக் கொண்டே இறங்கினோம். அதுவே ஸ்டிங் ஆபரேஷன் ஆனது. சுமார் மூன்று மாதங்களாக கஷ்டப்பட்டுதான் இதை ஒர்க் அவுட் செய்தோம் என கூறியுள்ளார் மூன் டிவி நிர்வாக இயக்குனர் ஷாநவாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்