கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்; பாசிச - நாசிச: டைமிங்கில் ரைமிங்கில் கலக்கும் ஸ்டாலின்

புதன், 9 ஜனவரி 2019 (20:55 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வோம்.. வெல்வோம் என்ற பரப்புரையை கடந்த 2ஆம் தேதி ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரின் அறிவிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சியை அவர் ஒத்தி வைத்திருந்தார்.
 
இந்த நிலையில் நேற்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த நிலையில் இன்று கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் ஊராட்சியில் திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டம் தொடங்கியது. 
 
அங்கு அவர் பேசியது பின்வருமாறு, மத்தியில் உள்ள மோடியின் ஆட்சியால் எவ்வளவு கொடுமைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். மதவாதம் பிடித்துத் திரியும் மோடி ஆட்சிக்கு துதி பாடக்கூடிய ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கறது. 
மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களை அழித்து, ஒழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை உருவாக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆட்சியில் ஒட்டி இருக்க வேண்டுமென்பதால் என்ன வேண்டுமானாலும் எடுபிடி வேலைகள் செய்யலாம், அடிபணிந்து இருக்கலாம் என்கிற நிலையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருக்கிறது.
 
இன்றைக்கு தமிழகத்தில் கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் ஆட்சியும், மத்தியில் பாசிச – நாசிச ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். 
கிராம சபைக்கு பஞ்சாயத்து ராஜ் என்று பெயர். ஆனால், இப்பொழுது இருக்கும் இந்த அதிமுக ஆட்சிக்கு கரப்ஷன் ராஜ் – கமிஷன் ராஜ் என்று சொல்லலாம். மோடி ஆட்சிக்கு பாசிச ராஜ் என்றும் நாசிச ராஜ் என்றும் சொல்லலாம். 
 
பலபேர் இன்னும் திமுக தான் இன்றும் ஆளுங்கட்சியாக இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் திமுக துணை நிற்கிறது. நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது எந்தத் தேர்தல் வந்தாலும், அதில் திமுக வெற்றிபெற நீங்கள் எல்லாம் உழைப்பீர்கள் என நம்புகிறேன் என பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்