ஃபீஸ் கட்டாத மாணவர்களுக்கும் பாஸ் போடுங்க! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (10:33 IST)
சமீபத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வெழுதாத அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அரியர் வைத்திருந்து தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. அரியர் தேர்வுகள் எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல மாணவர்கள் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டினர். இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் மார்ச் முதலாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பல மாணவர்களால் தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் போனது. இதில் அரியர் வைத்திருந்து கட்டணம் செலுத்தாத மாணவர்களும் அடக்கம். ஊரடங்கால் வருவாய் இழந்ததால் பலரால் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் போனதை கருத்தில் கொண்டு தேர்வு கட்டணம் செலுத்தாத செமஸ்டர் மற்றும் அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கவேண்டும்” என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்