பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டுவிட்டரில் இன்னும் சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தை தெரிவிக்கவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மீண்டும் பணமதிப்பிழப்பா? என்பது உள்பட பல ஐயங்கள் அனைவரிடத்தில் தொற்றி கொள்ள ஒரு வழியாக 'மிஷன் சக்தி' என்ற விண்வெளி திட்டத்தின் சாதனை குறித்த தகவலை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமரின் இந்த உரை தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் இவ்வாறு பேசியது சரியா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார்களால் தேர்தல ஆணையம் தூர்தர்ஷன் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியது.
ஆனால் இது குறித்து ப சிதம்பரம் வேறொருக் கருத்தை முன்வைத்துள்ளார். அதில் ‘விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம்’ என்றும் கூறியுள்ளார்.