சுஜித்தின் உடலுக்கு இறுதிச்சடங்கு: கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம்

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (07:25 IST)
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க மீட்புக்குழுவினர் கடந்த சில நாட்களாக போராடிய மீட்புக்குழுவினர் கடைசியில் சுஜித்தின் உடலை மட்டுமே மீட்டனர். 
 
சுஜித்தின் உயிரை காப்பாற்ற அரசு இயந்திரங்கள் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு, நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகல் பாராது, தீபாவளியை கூட கொண்டாடாமல் அமைச்சர்கள், அதிகாரிகள் விடிய விடிய தூங்காமல் நடுக்காட்டுப்பட்டியிலேயே தங்கியிருந்து மீட்புப்பணியை கவனித்தனர். இருந்தபோதிலும், இந்த சவால் நிறைந்த மீட்புப்பணி கடைசியில் தோல்வியில் முடிந்தது
 
இந்த நிலையில் சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சற்றுமுன் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், நடுக்காட்டுப்பட்டி கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சற்றுமுன் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இறுதிச்சடங்கின்போது சுஜித்தின் பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவில் இருந்தது.
 
சுஜித்தின் மரணமே ஆழ்துளையால் இறந்த கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்றும், இனியொரு உயிர் ஆழ்துளையால் இழக்கப்படக்கூடாது என்றும் சமூக வலைத்தள பயனாளிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்