கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கேரளாவை சேர்ந்த ஒரு பயணிக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு, வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டல் எடுத்துக் கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள், இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் கொடுத்தனர். இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் அதிரடி படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தவுடன் அந்த விமானம் ஒதுக்குப்புறமான இடத்தில் தரையிறக்கப்பட்டது.
அதன் பின், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ரகளை செய்த இரண்டு பயணிகளையும் சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர், அவர்களிடம் எந்த விதமான வெடிபொருட்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானத்தில் இருந்து இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.