எம்ஜிஆர் உறவினர் கொலை வழக்கு! தீர்ப்பை எதிர்க்கும் கைதிகள்!

வியாழன், 15 செப்டம்பர் 2016 (09:19 IST)
முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின்  உறவினர் விஜயன் கொலை கடந்த 2008 ஜூன் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்றபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.


 
முதலில், இந்த கொலை வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர். பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, போலீஸ்காரர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பானுவின் தோழியும், ஆசிரியையுமான புவனா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 13ம் தேதி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் பானு, கருணா, சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பானு உள்ளிட்ட 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி செல்வம் தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்