மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொண்ர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை சென்ற ஆண்டு அமைத்தது. கடந்த ஓராண்டாக அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் அப்போல்லோவில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விரைவில் சசிகலாவிடமும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. விசாரணை ஆணையம் ஜெயலலிதா ஏன் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறது,
இந்த விசாரணையில் திருப்பு முனையாக கடந்த 11-ந்தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1984-ல் உடல்நிலை சரியில்லாத போது அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் யார் உத்தரவின் பேரில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார் என்ற விவரங்களை அக்டோபர் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க சொல்லி அப்போல்லோவுக்கு உத்தரவிட்டது.
இரு சிகிச்சை முறைகளையும் ஒப்பிட்டு ஜெயலலிதா ஏன் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படவில்லை என்பதற்கான காரணத்தைக் கண்டறியவே எம்ஜிஆர் சிகிச்சை விவரங்கள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அப்போல்லோ நிர்வாகம் ஆணையத்திடம் சிகிச்சை விவரங்களைத் தாக்கல் செய்யாமல் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் ’எம்ஜிஆர் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழக அரசு வசம் உள்ளது. ஆணையம் அதை அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம். மேலும் எம்ஜிஆர் ஒரு அரசியல் தலைவர் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ரகசியம் காக்கப்படவேண்டிய ஒன்று. மேலும் எம்ஜிஆரை அமெரிக்கா அழைத்துச் சென்ற விவகாரத்தில் அப்போல்லோவுக்கு எந்த பங்கும் இல்லை. அனைத்து முடிவுகளையும் தமிழக அரசே எடுத்தது. அந்த விவரங்களையும் ஆணையம், தமிழக அரசிடம் பெற்றுக்கொள்ளலாம்.’ என்று பதில் அளித்துள்ளது.