பெண் என்ஞீனியரை எரித்துக்கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சனி, 9 டிசம்பர் 2017 (14:01 IST)
சென்னை ஆதம்பாக்கத்தில் பெண் என்ஞீனியரான இந்துஜாவை எரித்துக்கொன்ற வாலிபர் ஆகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (29). இவரும் ஆதம்பாக்த்திலுள்ள சரஸ்வதி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஞீனியரான இந்துஜா (23) என்பவரும் காதலித்து வந்தனர்.  

ஒருகட்டத்தில் இந்துஜா, ஆகாஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆகாஷ் பலமுறை தொடர்பு கொண்டும் இந்துஜா தொலைபேசியை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்துஜா தன்னை நிராகரிப்பதை உணர்ந்த ஆகாஷ் ஆத்திரமடைந்து இந்துஜா வீட்டுக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் இந்துஜா உடல்கருகி  பரிதாபமாக இறந்தார். அதை தடுக்க வந்த இந்துஜாவின் தாயார் ரேணுகா, தங்கை நிவேதிதாவுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்துஜாவின் தாயார் 
ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில்  போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதனிடம், ஆகாஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி சிபாரிசு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகாஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்