ம.ந.கூ.வினர் விஜயகாந்துடன் நிற்பதால் மாற்று அரசியலை குழிதோண்டி புதைத்துவிட்டனர் - தமிழருவி மணியன்

செவ்வாய், 10 மே 2016 (14:48 IST)
மக்கள் நலக் கூட்டணியை முன்வைத்தவர்கள் விஜயகாந்துக்கு பின்னால் நிற்பதால் மாற்று அரசியலை குழிதோண்டி புதைத்துவிட்டனர் என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து தமிழருவி மணியன் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”திமுக தேர்தல் அறிக்கையில் மது விலக்கு என்றும், அதிமுக படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறி உள்ளனர்.
 
மதுக்கடைகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து, தமிழ்ச் சமுதாயத்தை சீரழித்தது கலைஞர், ஜெயலலிதா இருவரும்தான். படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக ஜெயலலிதா சொல்வது சாத்தியப்படக் கூடியது. ஆனால், அதற்கான கால அளவை அவர் அறிவிக்க வேண்டும்.
 
மாற்று அரசாக மக்கள் நலக் கூட்டணியை முன்வைத்தவர்கள் விஜயகாந்த்துக்கு பின்னால் நிற்பதால் மாற்று அரசியலை குழிதோண்டி புதைத்துவிட்டனர். ஒரு கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என வைகோ கூறுகிறார்.
 
ஆனால், புதிய வாக்காளர்கள் விஜயகாந்தை முதல்வராக ஏற்கத் தயாராக இல்லை. திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
 
எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. 130 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார்’’ என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்