நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முதியவர் சந்திரன். இவர் கடந்த சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் இணைப்பு சாலை ஓரமாக நடைபாதையில் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கும்பல் ஒன்று அவரை தீ வைத்து கொளுத்தியதில் அப்பாவி முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் மதுரையை சேர்ந்த பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீபமாக சில நாட்களாக அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் இருந்த பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் வரும் வழியில் சாலை ஓரமாக உறங்கி கொண்டிருந்த முதியவரிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளனர். பின்னர் குடிபோதையில் அதை கொண்டு அவரையே கொளுத்தி கொன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.