ஹெல்மெட் அணிய ரெடி…. தரமான சாலை அமைக்க நீங்கள் ரெடியா?... மதுரையில் பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்!

சனி, 11 ஜூன் 2022 (10:21 IST)
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுபோல உத்தரவுகள் அவ்வப்போது வருவதும், சில நாட்கள் கெடுபிடிகள் அதிகமாக்கப் படுவதும், பின்னர் அவற்றை கண்டுகொள்ளாததும் தொடர்ந்து நடந்து வருவதுதான்.

இந்நிலையில் தற்போது மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் “மான்புமிகு நீதித்துறையே… மாட்சிமை பொருந்திய தமிழக அரசே… நேர்மைமிகு காவல்துறையே… உங்களின் கணிவான கவனத்திற்கு… தரமான ISI ஹெல்மெட் அணிய நாங்கள் ரெடி.,.. தரமான சாலை அமைத்துத் தர நீங்கள் ரெடியா? சாலைகளின் குண்டுகுழியை அடைக்க மக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை?... மதுரை நண்பர்கள்” என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்க்கவே பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்