தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் அனுமதி என்ற கட்டுப்பாடு உள்ளது. மதுரையில் இதுவரை 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலைக்கு மாலை போட்டு செல்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் தரிசனம் செய்ய செல்வதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் அவசியம் செலுத்தி இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த 4 புற நுழைவு வாயில்களிலும் 20 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.