தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் அதிகம் இருப்பதால், அதன் கதிரியக்கத் தன்மை கொண்ட தனிமங்களுக்காக அதிக விலை மதிப்புடையதாக கருதப்பட்டது. இந்த நிலையில், இந்த மணலை சட்டவிரோதமாக எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து கொண்டு இருப்பது தொடர்ந்து வந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. இதனை அடுத்து, தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்ய ஐஏஎஸ் அதிகாரி சுகன்திப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை குழு அறிக்கை அளித்த பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பில் தாது மணல் அல்லவும் ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சிறப்பு அதிகாரிகளை நியமித்து சிபிஐ கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள் சிபிஐ ஒப்படைக்க வேண்டும் என்றும், சிறு தவறுகள் கூட சமுதாயத்தை அழித்து விடும்; அதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.