பன்னீர்செல்வத்தை காப்பாற்றுங்கள்! - மத்திய அமைச்சரிடம் முறையிட்ட ஓ.பி.எஸ். அணி

புதன், 22 மார்ச் 2017 (08:27 IST)
ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர் பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது அணியினர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.


 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். பெரியகுளத்திலிருந்து தேனிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் அவரது காரில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதால் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பு வழங்க வேண்டுமென மைத்ரேயன் எம்.பி., தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன் கூறுகையில், “பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் அதிகரித்து வருகின்றன. ஓ.பி.எஸ். கையை வெட்டுவேன் என்று ஒருவர் வெளிப்படையாகவே கூறுகிறார்.

எனவே அவருக்கும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனுக்கும் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தோம். அவரும் புலனாய்வுத் துறையின் மூலம் ஆராய்ந்து பாதுகாப்பு வழங்குகிறேன் என்று உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்