அதிமுகவிலும் ஆட்சியிலும் இன்று நடந்த மாற்றங்கள்!

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:17 IST)
நீண்ட நாட்களாக அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் இருந்து வந்த குழப்பம் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் மேலும் குழப்பம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. தினகரன் அணியின் நகர்வை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


 
 
ஆனால் தமிழக அரசியலில் இன்று குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதிமுக அணிகள் இணைப்பின் காரணமாக ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிவிசாரணைக்கு வழி பிறந்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டு அவரது நினைவிடமாக உள்ளது.
 
மேலும் தினகரன், சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் அவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. இறுதியில் ஓபிஎஸ் அணியும் ஈபிஎஸ் அணியும் இணைந்ததின் மூலம் மீண்டும் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்கும் வழி பிறந்துள்ளது.
 
அதிமுக பொதுக்குழு விரைவில் கூடி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்வோம் என அறிவித்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாக துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்றுள்ளார். மேலும் அவருக்கு நிதித்துறை, வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் கல்வி மற்றும் இளைஞர், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தற்போது தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
 
மேலும் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை கூடுதலாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை கூடுதலாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டதால் ஜெயக்குமாருக்கு மீன் வளத்துறை மட்டும். செங்கோட்டையனிடம் பள்ளி கல்வித்துறை உள்ளது. இப்படி ஒரே நாளில் அதிமுகவிலும், ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்