நேற்று கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி மைதானத்தில் சென்னை கிழக்கு மாவட்டம் திமுக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் அதிலிருந்து ஒன்றிய அரசு 28 பைசாவை மட்டுமே திரும்ப தருகின்றனர். அதனால் தற்போது மோடிக்கு நான் புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளேன். இனி நான் பாரத பிரதமர் அவர்களை 28 பைசா என்றுதான் அழைக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
இது தமிழக பாஜகவினரிடையே பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “எதிர்கட்சியினர் எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்குதான் மத்திய அரசு அதிகமான நிதியை கொடுத்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜகவை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்றும், அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு எதிராக தேர்தல் பத்திரங்கள் உள்ளது எதிர்கட்சிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.