எனக்கு விஷ ஊசி போட்டு கொன்று இருக்கலாம்: ஹெச்ஐவி பாதித்த கர்ப்பிணி கதறல்

வியாழன், 27 டிசம்பர் 2018 (11:18 IST)
விருதுநகர்: எச்.ஐ.வி. கிருமி தொற்று ஏற்படுத்தியதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்றிருக்கலாம் என பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கதறினார்.


 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் ஏற்றியதால்  9 மாத கர்ப்பிணி பாதிக்கப்பட்டுள்ளார்.  அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்து மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
 
 நான் பொதுவாக காய்ச்சல், தலைவலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன். ஊசி போடக்கூட மாட்டேன் கர்ப்பிணியாக இருப்பதால் அரசு மருத்துவமனையை நம்பி சென்ற எனக்கு இப்படி ஒரு பாதிப்பை ஏற்பட்டுவிட்டது.
 
ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தி விட்டார்கள். இதற்கு பதிலாக எனக்கு விஷ ஊசி போட்டு டாக்டர்கள் கொன்று இருக்கலாம். சாத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சையின்போது வேறு ஊசி ஏதும் போடவில்லை. ரத்தம் மட்டுமே செலுத்தினார்கள்..
 
இந்த தவறு நடந்த பிறகு என்னை சந்தித்த மருத்துவ துறையினர் இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். அரசு வேலை, நிவாரணம் பெற்று தருகிறோம் எனக்கூறுகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. மருத்துவ துறையினரின் தவறான செயலால் இந்த சமுதாயம் ஒதுக்கும் நிலைக்கு என்னை தள்ளிவிட்டார்கள். எனக்கு மட்டுமின்றி என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைக்கும்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதில் தவறு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை தேவை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
 
இவ்வாறு அவர் கூறியபோது கதறி அழுதார். பின்னர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்தது.
 
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, “எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது, அழுது கண்ணீர் வற்றிவிட்டது. அரசு ஆஸ்பத்திரி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. என் மனைவிக்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்