அரசியலுக்கு வருவோம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

புதன், 1 பிப்ரவரி 2017 (11:20 IST)
மாணவர்களுடன் சேர்ந்து தனி அமைப்பை தொடங்கவுள்ளதாகவும், தேவைப்பட்டால் அரசியலுக்கும் வருவோம் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு வேண்டி சென்னையை சேர்ந்த மாணவர்கள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய போது, நடிகர் ராகவா லாரன்ஸ் தானாகவே சென்று அவர்களுடன் இணைத்துக் கொண்டார். 
 
இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் நடத்திய போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் சிலர் அரசியல் சாயம் பூசுகிறார்கள். அது வருத்தமாக இருக்கிறது. தற்போது போராட்டக் குழுவினரோடு பயணித்து வருகிறேன். எங்களின் போராட்டத்தின் அடுத்தகட்டமாக சிலவற்றை செய்ய முடிவெடுத்துள்ளோம். கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை கொடுத்து உதவி செய்ய முடிவானது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுக்கும் உதவி செய்ய முடிவெடுத்துள்ளோம். 
 
ஏற்கனவே, நான் அறக்கட்டளை வைத்து சில உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். அதனால், தற்போது ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம்.
 
இந்த அமைப்பில் இருக்கும் மாணவர்கள் எந்த அரசியல் கட்சி மற்றும் ஜாதி அமைப்பில் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அரசியலுக்கும் வருவோம். ஜல்லிக்கட்டிற்காக நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதை விரைவில் கொண்டாடவுள்ளோம்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்