புயல் வரும் முன்னே காப்பாற்றப்படுவார்களா மீனவர்கள்? – குமரி மக்கள் வேதனை!
புதன், 30 அக்டோபர் 2019 (12:40 IST)
அரபிக்கடலில் சிக்கிக் கொண்டுள்ள மீனவர்கள் புயலில் சிக்கி கொள்வதற்கு முன்னர் காப்பாற்றப்பட வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாக்குமரி மீனவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீன்பிடிப்பதற்காக அரபிக்கடலில் விசைப்படகுகளுடன் பயணித்தனர். அவற்றில் 7 படகுகள் மட்டும் இன்னமும் கரை சேரவில்லை. சுமார் 90 மீனவர்கள் கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அவர்களை மீட்கும் பணியை தாமதப்படுத்தி வந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுபெற்றிருப்பதால் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மீனவர்களை மீட்கும் பணி பெரும் இடர்பாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. கடலில் சிக்கியுள்ள 7 படகுகளில் இரண்டு படகுடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்துள்ளது. மீத 5 படகுகளில் நிலை குறித்து இதுவரை தெரிய வரவில்லை.
எனவே புயல் உருவாகும் முன்னே மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குமரி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.