கே.எஸ் அழகிரி மாற்றம்.! தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!

Senthil Velan

சனி, 17 பிப்ரவரி 2024 (22:49 IST)
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ் அழகிரி மாற்றப்பட்ட நிலையில், புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. 
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை தனது தலைமையில் சந்தித்து, கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
 
சத்தியமூர்த்தி பவனில் ஒரே ஒருமுறை மட்டுமே கோஷ்டி சண்டை நடைபெற்றுள்ளது. அதனால், டெல்லி தலைமையும், அழகிரியை மாற்றும் விவகாரத்தில் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது. 
 
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:
 
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. செல்வ பெருந்தகை அவர்களுக்கு  எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: தங்கல் படத்தில் நடித்த நடிகை திடீர் மரணம்..! அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்..!!
 
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ் அழகிரி அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்