இந்நிலையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொடநாடு பங்களாவில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த இரண்டு காவலர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து சில ஆவணங்களையும், பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதில் பங்களா காவலர் ஓம்பகதூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், அப்பகுதியில் பேக்கரி வைத்திருந்த சயான் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் பிறகு சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், சயானும் விபத்து ஒன்றில் சிக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சமீபத்தில் ஜாமீன் பெற்ற சயான் விசாரணைக்கு மட்டும் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் கனகராஜ் – எடப்பாடியார் இடையே தொடர்பு இருந்ததாகவும், அவரது சொல்படி கனகராஜ் செயல்பட்டதாகவும் சயான் சொல்லியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த வழக்கு மீதான மறு விசாரணை குறித்து 27ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த வழக்கு மீண்டும் சட்டப்பேரவை மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.