நேற்று முந்தினம் கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், 5 பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல், மூன்றரை சவரன் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இதனையடுத்து அந்த நகை கடை உரிமையாளர், பத்தினம்திட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து கேரளா போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கேரளா போலீஸார், தமிழ்நாடு போலீஸாருக்கும் தகவல் அனுப்பினர்.
இந்நிலையில் கோவை, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் நேற்று நள்ளிரவில் விடிய விடிய சாலைகளில் செல்லும் வாகனங்களை சோதனையிட்டனர். இதனிடையே சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் வாகன சோதனையில் போலீஸார் ஒரு வாகனத்தை சோதனை இட்டபோது, அதில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கணபதி யாதவ், பிரசாத் யாதவ், ஆதாஷ் சார்க், நித்தின் யாதவ்,, தாதாசாகிப் ஆகியோர் இருந்துள்ளனர். அந்த வாகனத்தை தீவிரமாக சோதனையிட்ட போலீஸார், அதில் மூன்றரை கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த காரில் இருந்த நித்தின் யாதவ், அந்த தங்க நகைகளுடன் தப்பி ஓடினார். அவரைத் தவிற மற்றவர்களை கைது செய்த போலீஸார், அந்த காரை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தப்பியோடிய நித்தின் யாதவையும் தேடத் தொடங்கினர்.
நேற்று இரவு முழுவதும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் நெய்க்காரப்பட்டி சுடுகாட்டில் பதுங்கி இருந்த நித்தின் யாதவை, அந்த பகுதியைச் சேர்ந்த சக்திவேல், செல்வம், ஆகியோர் சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து கொண்டாலம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை கமிஷனர் தங்கதுரை தலைமையிலான போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நித்தின் யாதவை கைது செய்தனர்.
இதன் பிறகு இந்த 5 பேரின் மீது நகை கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சேலம் கொண்டாலம்பட்டி காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர். மேலும் இவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் 5 பேர் சிக்கியது குறித்து கேரள போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.