திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைப்பாடு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டிருப்பதால் அவரால் பேச முடியவில்லை. மேலும், அவருக்கு மறதியும் ஏற்பட்டுள்ளது.
அந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேத் இரவு திடீரென, முரசொலி அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த புகைப்படங்களை பார்வையிட்டு பரபரப்பை உண்டாக்கினார். மேலும், பிரதமர் மோடி அவரை சந்தித்து சென்ற பின், வீட்டின் வெளியே வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து அவர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.
இந்நிலையில், இன்னும் 2 நாட்களில் அவர் திமுக தலைமை அலுவலகம் இயங்கும் அண்ணா அறிவாலயத்திற்கு அவர் வர இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாகவே, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அறிவாலயத்திற்கு தினமும் வருவதை பழக்கமாகவே கொண்டிருந்தவர் கருணாநிதி.
ஆனால், உடல் நிலை காரணமாக கடந்த ஒரு வருடமாக அவர் அங்கு செல்லவில்லை. எனவே, அவருக்கு பிடித்தமான இடத்திற்கு அவரை அழைத்து செல்வது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருந்தாலும், தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவாலயத்திற்கு கருணாநிதி வருவது திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என ஸ்டாலின் கணக்குப் போடுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.