ராம்குமாரின் தந்தை, வழக்கறிஞரை சந்திக்க மறுத்த கருணாநிதி : நடந்தது என்ன?

வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:44 IST)
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் மரணமடைந்த ராம்குமாரின் தந்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோரை, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது முயற்சியின் போது, ராம்குமாரின் கழுத்து அறுபட்டது முதல், தற்போது மரணம் அடைந்திருப்பது வரை பல மர்மங்களும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது இந்த வழக்கு.
 
ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் தரப்பும், ராம்குமார் நிரபராதி.. உண்மையான குற்றவாளிகளை மறைப்பதற்காக போலீசார் ராம்குமாரை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்று வழக்கறிஞர் ராம்ராஜ்,  ராம்குமாரின் பெற்றோர்கள் மற்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், அவர் சமீபத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அது திட்டமிட்ட கொலை என்று ராம்குமாரின் தந்தை மற்றும் அவரின் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
மேலும், ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அதற்குரிய விளக்கத்தை தமிழக அரசு அளிக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, சீமான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்படாமல், சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ராம்குமாரின் தந்தை பரமசிவம் மற்றும் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றனர். ராம்குமாரின் மரணம் குறித்து உண்மை நிலையை அறிய, கருணாநிதி குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் சென்றதாக தெரிகிறது.
 
ஆனால், அவர்களை சந்திக்க கருணாநிதி மறுத்துவிட்டார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக திசை திருப்பும் முயற்சிகள் நடக்கும் என்று காரணம் கூறப்பட்டதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்