டெபாசிட் இழந்தும் ரஜினியை சீண்டிய கமல்ஹாசன்

வெள்ளி, 24 மே 2019 (12:20 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டும் பெறவில்லை. ஆனாலும் ஒருசில தொகுதிகளில் இக்கட்சிக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 16.5 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இருப்பினும் இக்கட்சி இன்னும் வெற்றியை ருசிக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
 
இந்த நிலையில் இன்று பேட்டியளித்த கமல்ஹாசன், ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறி வரும் நிலையில் இன்றைய பேட்டியின்போது கூறிய கமல்ஹாசன், 'தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது என்றும் வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். ரஜினியை மட்டுமே வாழ்நாள் முழுவதும் எதிரியாக கொள்ளாமல் ஆக்கபூர்வ அரசியலில் அவர் ஈடுபட வேண்டும் என்று நடுநிலையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் கமல்ஹாசன் இன்றைய பேட்டியில் மேலும் கூறியபோது, 'பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்றும், கடந்த 14 மாதத்தில் எங்களால் என்ன முடியுமோ, அதை செய்துள்ளோம் என்றும் இந்த 14 மாத குழந்தையை வாரி அணைத்து நடக்க வைத்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.
 
மேலும் தேர்தல் தோல்வியால் ஏமாற்றம் இல்லை என்றும், பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே ஒரு பெரிய சாதனை தான் என்றும் நாங்கள் யாருக்கும் பி டீம் இல்லை இல்லை, நேர்மைக்கு நாங்கள் தான் "ஏ" டீம் என்பது உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்