எல்லா அதிகாரமும் எனக்கே.. – சினிமாப் பாணியில் அரசியல் செய்கிறாரா கமல் ?

ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:02 IST)
கமலின் மக்கள் நீதி மய்யத்தில் முடிவெடுக்கும் அத்துணை அதிகாரங்களும் கமலின் கையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கமல் தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே வேளையில் தனது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது, இயக்கம் என அனைத்திலும் மூக்கை நுழைக்கும் குணம் உள்ளவர் என்று சினிமா உலகில் உள்ளவர்களுக்குத் தெரியும். கமலின் பல படங்களில் இயக்குனர் என்ற பெயரில் ஒருவரை நியமித்து விட்டு கமல்தான் இயக்கினார் என்பதும் உலகறிந்த செய்தி.

அனைத்து அதிகாரங்களையும் தானே வைத்துக்கொண்டு மற்றவர்களை தனது ஆணைக்கு இணங்கும் பொம்மைகளாக ஆட்டும் தனது சினிமாப் பாணியை இப்போது அரசியலிலும் அவர் பின்பற்றுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் மிகச்சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து இருத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இவற்றில் நாடாளுமன்றத் தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடும் என அறிவித்து விட்டாலும் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை. அதேப் போல திருவாரூர் இடைத்தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடுமா என்ற விவரமும் இல்லை.

இது சம்மந்தமாக ஆழ்வார்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம்  நடைபெற்றது. நடைபெறவுள்ள திருவாரூர் இடைத் தேர்தல் குறித்தும், மக்களவைத் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் தேர்தல்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தலைவர் கமலுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்சியின் உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்காமல் எல்லா முடிவுகளையும் கமல் மட்டுமே எடுப்பதாக ஒரு தோற்றம் எழுந்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் கமல் மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்