மதுரையில் கடந்த சில நாட்களாக சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பச்சை பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் வெட்டி சப்பரத்தில் எழுந்தருளிய அழகர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நேரத்தில், பெண்கள் சர்க்கரை தீபங்களை ஏற்றி கள்ளழகரை வரவேற்றனர். லட்சக்கணக்கான மக்கள் “கோவிந்தா கோவிந்தா” எனும் பக்தி முழக்கத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக்கொண்டு வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது என்பதும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை மேற்கொண்டிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.