நடிகர் ஜெய், கடந்த மாதம் 21-ஆம் தேதி குடி போதையில் தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. ஜெய் ஏற்படுத்திய விபத்து குடிபோதையில் நடைபெற்றது என்பதால் எவ்வித சமரசமும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தது காவல்துறை.
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார். அதனையடுத்து அந்த வழக்கின் விசாரணை கடந்த 6ம் தேதியும் நடைபெற்றது. ஆனால், ஜெய் ஆஜராவில்லை. எனவே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தனர்.
இந்நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், வேறு வழியின்றி இன்று காலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜெய் ஆஜரானார்.
அப்போது ‘ வாழ்க்கையும் சினிமா போல் நினைத்தீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் ஏதும் கூற முடியாமல் அமைதியாக நின்றார் ஜெய். அதன் பின், உங்கள் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா? எனக் கேட்டார். அதற்கு ஜெய் ‘ஆமாம்’ என பதிலளித்தார்.