”அத்திவரதர் கனவில் வந்து என்னை புதைக்க வேண்டாம் என அழுதார்”..பரபரப்பை கிளப்பிய ஜீயர்

செவ்வாய், 23 ஜூலை 2019 (12:14 IST)
அத்திவரதர் தன் கனவில் வந்து, ”என்னை புதைக்க வேண்டாம்” என கண்ணீர் விட்டு அழுததாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தினமும் லட்சக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். 40 வருடங்களுக்கு ஒரு முறை எழுந்தருளி காட்சித் தந்து வரும் அத்திவரதர், வருகிற ஆகஸ்டு 17 ஆம் தேதி மீண்டும் பூமிக்கடியில் செல்கிறார்.

இதனிடையே நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், அத்திவரதரை மீண்டும் புதைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அத்திவரதரை புதைக்ககூடாது என முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது ”அத்திவரதர் தன் கனவில் வந்து புதைக்க வேண்டாம் என்று அழுதார்” என கூறி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த காலத்தில் அத்திவரதர் உள்ளிட்ட பல விக்கிரகங்களை அந்நிய நாட்டு படையெடுப்பிலிருந்து காப்பாற்ற நீருக்குள்ளும் பூமிக்குள்ளும் புதைத்து வைத்தனர். ஆனால் தற்போது அது தேவையில்லை என கூறியுள்ள ஜீயர், அத்திவரதர் நேற்று கனவில் வந்து ”பக்தர்களுக்கு இடைவிடாது ஆசி வழங்கிகொண்டிருக்கும் என்னை நீருக்குள்ளும் பூமிக்குள்ளும் புதைத்து வைக்கலாமா?” என கண்ணீர் மல்க அழுததாக கூறியுள்ளார்.

ஜீயரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தாலும், ஒரு பக்கம் ஜீயருக்கு ஆதரவாகவும் சில குரல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதாவது ஜீயர் சொல்வது போல் அத்திவரதரை நிரந்தரமாக கோவிலில் வைத்தால், திருமலை திருப்பதி போலவே காஞ்சிபுரத்திலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், வணிகர்களின் பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் உயரும் எனவும் சிலர் ஜீயருக்கு ஆதரவாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்