டிச.4 மாலை; திடீரென கேட்ட இருமல் சத்தம்; ஜெ. அருகில் சசிகலா - நடந்தது என்ன?

வியாழன், 9 மார்ச் 2017 (12:11 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் வெளிப்படத்தன்மை இல்லாததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்த வரை எல்லாமே மர்மமாக இருக்கிறது. 


 

 
எனவே, அவரது மரணம் குறித்து நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
இந்நிலையில், ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பாக, பிரதமர் மோடி தரப்பிலும் சந்தேகம் இருப்பதாகவும், ஏற்கனவே மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அப்பல்லோவில் விசாரணையை தொடங்கி விட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணை அமைக்கப்படுவதற்கு முன்னோட்டமாக இந்த விசாரனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.  
 
அதிகாரிகளின் விசாரனையில் பல திடுக்கிடும் விபரங்கள் தெரிய வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக, ஜெ. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், மருத்துவர்களை தவிர, ஒரு ஷிப்ஃடுக்கு 3 பேர் வீதம் மொத்தம் 9 பேர் தினமும் ஜெ.விற்கு பணிவிடை செய்து வந்துள்ளனர். அதில் சிலரிடம் ஜெ. நெருக்கமாக பேசி வந்ததாக தெரிகிறது.  ஒரு கட்டத்தில் அவரில் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், அவர் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  அப்போது பணியில் இருக்கும் 3 நர்சுகளும், தேவைப்பட்டால் உள்ளே சென்று ஜெ.விற்கு உதவியாக செய்வார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் அறைக்கு வெளியே காத்திருப்பார்கள். 
 
ஜெ.வின் அறையில் சசிகலா மட்டும் இருந்துள்ளார். டிச.4ம் தேதி மாலை, ஜெ. உறங்கிக் கொண்டிருந்ததால், மருத்துவ உதவியாளர்கள் 3 பேரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது திடீரென இருமல் சத்தம் கேட்டு, பதறியடித்துக் கொண்டு மருத்துவ உதவியாளர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜெ. வின் அருகில் சசிகலா நின்று கொண்டிருந்தார். மேலும், ஜெ. திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதைப் பார்த்து உதவியாளர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். அதன் பின்புதான் அவருக்கு மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.  அதன் பின்னரே அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது என்பது அதிகாரிகளுக்கு தெரிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
திடீரென அவருக்கு இருமலும், வாந்தியும் எப்படி ஏற்பட்டது? அவருக்கு திரவ உணவு ஏதேனும் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து, அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் 9 மருத்துவ உதவியாளர்களிடமும் அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், அப்பல்லோவில் கிடைத்த சில சிசிடிவி வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்