தமிழகம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியாக முடிந்தன. இதையடுத்து இன்று அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘அவர்கள் இங்கிருந்து பிரிந்து சென்ற ஒரு குழு. அவர்களுக்குத் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சியைப் பதிவு செய்யலாம். ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறைந்தபட்சம் 6 சதவீத வாக்காளர்கள் இருந்தால் தான் அது அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அவர்களுக்கு 1-2 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம். அதனால் அவர்கள் கடைசி வரை குழுவாகவே இருக்கமுடியும்; கட்சியாக முடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.