மறு வாக்குப்பதிவு வேண்டும்: திருச்சியில் அமமுக வேட்பாளரால் பரபரப்பு

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (09:09 IST)
நேற்று தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ஒருசில இடங்களில் மட்டும் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்கு நடத்த வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
 
திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படி இல்லாமல் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் அ.ம.மு.க-வினர் புகார் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மச்சுவாடி வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்த அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், தனக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மாறி விழுந்துள்ளதாகவும் எனவே இந்த வாக்குச்சாவடியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க தேர்தல் அதிகாரிகள் மறுத்ததால், வாக்குச்சாவடி அலுவலகத்தில் அ.ம.மு.க நிர்வாகிகளோடு அமர்ந்து சாருபாலா தொண்டைமான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்ததை அடுத்து சாருபாலா தொண்டைமான் தனது தர்ணா போராட்டத்தை கைவிட்டார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்