நாடு போற்றும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடி வெற்றி பெற்றனர் இளைஞர்கள். ஆனால் இந்த போராட்டத்தின் முடிவு கலவரத்தில் முடிவடைந்தது பலரையும் வருத்தமடைய வைத்தது. ஆனால் இந்த கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வழி செய்ய மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு நேற்று மாலை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே போராட்டத்தை கைவிடுவதில் கலவரம் மூண்டது. சென்னையே நேற்று பதற்றமாக அச்சத்தில் இருந்தது. வன்முறை, கல்வீச்சு, தடியடி, தீ வைப்பு என கலவர பூமியானது சிங்கார சென்னை.
இதனையடுத்து இந்த கலவரத்துக்கு காரணம் இளைஞர்கள் இல்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத சக்திகள் மறைமுகமாக தலையிட்டது தான் கலவரம் ஏற்படக் காரணம் என தெரிவித்தனர்.