ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி..! மூன்றாண்டு சிறை தண்டனை உறுதி..!!

Senthil Velan

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:54 IST)
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.
 
தமிழ்நாட்டின் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ் . கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்க சென்ற இடத்தில் பெண் எஸ்பிக்கு ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் முதன்மை அமர்வு ஆகியவை கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
 
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு சதி என்று கூறி, ராஜேஷ் தாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மேலும் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்புக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகார் அளிக்கப்பட்டதாக கூறினர். மேலும் பல ஆண்டுகளாக காவல் துறைக்கு தலைமை வகித்த நிலையில் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும் வாதிடப்பட்டது. 
 
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையில் ராஜேஷ் தாஸ் உயர் பதவி வகித்ததால் சரணடைய  விலக்கு அளிக்க வேண்டுமென அவர் தரப்பு வாதத்தை ஏற்க கூடாது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, பாலியல் வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? என கேள்வி எழுப்பினார்.

ALSO READ: வெற்றி வாய்ப்பு எப்படி..? மாவட்ட செயலாளருடன் இபிஎஸ் ஆலோசனை..!!

மேலும் ராஜேஷ் தாசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்