நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கும் இடையே நாளுக்கு நாள் வாக்குவாதம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடருக்கு கூட மத்திய அரசு சரியாக நிதி ஒதுக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நேற்று சென்னை, காரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பாஜக மகளிர் சங்கமம் விழாவில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கியது பிரதமர் மோடிதான். அந்த பணத்தை போட்டுக் கொடுத்த 50 பைசா கவரும் 5 ரூபாய் மஞ்சள் பையும்தான் இவர்கள் கொடுத்தது. பிரதமர் தமிழ்நாட்டிற்காக கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் கொண்டுவந்தது போல காட்டிக் கொள்கிறார்கள்” என பேசியுள்ளார்.
மேலும், திமுகவில் குடும்ப ஆட்சி நடைபெறுவதாகவும், எம்.பி சீட்டுகள் கூட பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு தரப்படுவதாகவும் விமர்சித்த அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களும் உயர் பதவிகளை அடைய வேண்டும் என பாடுபடுகிறோம் என்றும் கூறியுள்ளார்.