சரத்குமார் வீட்டில் ரெய்டு நடக்க இது தான் காரணமாம்: அவரே சொல்றார் கேளுங்க!
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (15:08 IST)
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரின் வீட்டில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஆர்கே நகர் தேர்தல் நேரத்தில் வந்திருக்கும் இந்த வருமான வரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நான் பிரச்சாரம் செல்வதை தடுக்கவே இந்த சோதனை நடைபெறுவதாக சரத்குமார் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாக சரத்குமார் நேற்று அவரை நேரில் சந்தித்து தெரிவித்தார். இன்று பிரச்சாரத்துக்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் தான் இந்த ரெய்டு நடந்துள்ளது.
ஆனால் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடத்திருப்பது தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரத்குமாரின் வீட்டின் முன்னர் குவிந்த அவரது ஆதரவாளர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த சரத்குமார் தொண்டர்களை சந்தித்து சமாதானம் செய்தார். ஆனாலும் அவரது தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சரத்குமார்.
அப்போது பேசிய அவர், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எந்த ஆவணமோ பணமோ கைப்பற்றவில்லை என்றும் கூறினார். மேலும் ஆர்கே நகருக்கு நான் பிரச்சாரத்திற்கு செல்வதை தடுக்கவே வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றதாக கூறினார்.