சென்னை ஐடி துறையில் பணிபுரிந்து வந்த கவின்குமார் என்ற இளைஞர், விடுமுறைக்காக தனது சொந்த ஊரான நெல்லைக்கு வந்த நிலையில், அவரது காதல் விவகாரத்தால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவின்குமார் தனது தாத்தாவுடன் நெல்லையில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த சுர்ஜித் என்ற இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து கவின்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார். கொலைக்கு பின்னர், சுர்ஜித் நெல்லை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த சுர்ஜித் அளித்த வாக்குமூலத்தில், தனது பெற்றோர் இருவருமே காவல்துறையில் பணிபுரிபவர்கள் என்றும், தனது அக்காவை கவின்குமார் காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பலமுறை தனது அக்காவுடன் பழக வேண்டாம் என்று கவின்குமாரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும், சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தனது அக்காவை பார்ப்பதற்காக கவின்குமார் அடிக்கடி வந்ததால், ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.