''வளர்த்த யானையை விட்டுப் பிரிவது கஷ்டம் தான்''- பொம்மன், பெள்ளி

செவ்வாய், 21 மார்ச் 2023 (21:32 IST)
'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' என்ற குறும்படம்  இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த படத்தை  இயக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்  கார்த்திகி ஆவார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில்  அமெரிக்காவில்  நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது இந்த வருடம் யார் சிறந்த நடிகர், நடிகை, படம், குறும்படம், பாடல் ஆகிய பிரிவுகளில் விருது பெறப்போகிறார்கள் என்று.

இவ்வருடம் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது, ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற  நாட்டு நாட்டு பாடல் வென்றது.  இவ்விருதை கீரவாணி பெற்றுக்கொண்டார். அதேபோல் சிறந்த குறும்படத்திற்கான விருது தி எலபெண்ட் விஸ்பர்ஸ் படம் வென்றது. இதற்கான விருதை இயக்குனர்  கார்த்திகி பெற்றுக்கொண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி  நெட்பிளிக்ஸில் வெளியான தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் படம் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்தப் படத்தில்,   நீலரி மாவட்டம் முதுமலை என்ற கிராமத்தில்  யானை பராமரிப்பாளரும், அந்த குட்டி  யானைகளைத் தம் குடும்பத்தில் ஒருவராகப் பாவிக்கும்  காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியரின் வாழ்வியல்  படம்பிடிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குட்டி யானைகளை பிள்ளையைப் போல் பார்த்து வளர்ப்பது இவர்களின் தனிக்குணம். குட்டியானை தன் தாயைப் பிரிந்து உடலில் பல காயங்களுடன் இருந்தபோது, ரகு என்று பெயரிட்டு இருவரும் அந்த யானையை வளர்த்தனர். அதேபோல் சத்தியமங்களத்தில் தனியாக இருந்த யானையையும் அவர்களே தம் குடும்பத்தில் ஒருவராகப் பராமரித்தனர்.

ஆனால், இவர்கள் வளர்த்து வந்த பொம்மி மற்றும் ரகு என்ற யானைகள் வேறு பரமாரிப்பாளர்களிடம் கொடுத்து வளர்க்கப்பட்டு வருகிறது.. இதைப் பிரிந்து  பெள்ளி மற்றும் பொம்மன் இருவரும் சோகத்தில் இருந்தனர். இவர்களின் இந்த வாழ்வை தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்-ல் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவர்களின் வாழ்வியல் படம் ஆஸ்கர் விருது வென்ற நிலையில் இவர்களிடமிருந்து அந்த யானைகள் வேறு பராமரிப்பாளர்களிடம் வளர்க்கப்பட்டு வருவதால், சமீபத்தில் முதுமலை யானைகள் முகாமிற்குச் சென்ற பெள்ளி தான் வளர்த்து வந்த யானையான பொம்மியைப் பார்த்து கண்ணீருடன் சென்றார்.

இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில் காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது. சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் இவர்கள் இருவரையும் அழைத்து, பாராட்டினார். அதேபோல்  விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பொம்மன் மற்றும் பெள்ளி இருவரையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் அளித்த பேட்டியில், 'பிள்ளைபோல் வளர்த்த யானையை விட்டுப் பிரிவது கஷ்டமாக' இருக்குமென்று இருவரும் கூறியுள்ளனர்.
 
உலகப்புகழ்பெற்ற விருது பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்தும்,  ஊடக வெளிச்சத்தின் மீது இருவரும் விழுந்தும் கூட அவர்களின் சோகம் களையப்படாதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்