இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? என திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு நடந்தாலும், திரு. முக ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரின் எண்ணம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையிலேயே இருந்துள்ளது.
ஆளுங்கட்சியாக இருக்கும் போதே முழு எண்ணமும் அஇஅதிமுக குறித்தே இருக்கின்றது , இதுவே அஇஅதிமுக ஆட்சி வரப்போகிறது என்ற பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டதற்கான வெளிப்பாடு.
இக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டங்ஸ்டன் விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை , மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் பிப்ரவரி 2024ல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் இந்த திமுக அரசு பதிவு செய்யவில்லை ?
ஏலம் அறிவிக்கப்பட்டது முதல் 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் வரை, 10 மாத காலம் வாயை இறுக்க முடி கொண்டு , ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த திமுக அரசு,
மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக , வேறுவழியின்றி மாண்புமிகு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ,மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு சுரங்க அனுமதியை ரத்து செய்யுமாறு 29.11.2024 அன்று கடிதம் எழுதியுள்ளார் ,
அந்த கடிதம் கிடைக்க பெற்றவுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தனது
X-தள பதிவு மூலமாக , "இதுவரை மாநில அரசிடம் எந்தவித எதிர்ப்போ, ஏலத்தை கைவிடுமாறு கோரிக்கையோ எங்களுக்கு வரவில்லை" என்ற பதிலை அதே நாளில் பூமராங் போன்று திருப்பி அனுப்பியதை பற்றி இன்று வரை திமுக பேச மறுப்பது ஏன்?
விடியா திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறை அமைச்சருக்கு -அக்டோபர் 3 2023 அன்று எழுதிய கடிதத்தில் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்க்காமல், மாறாக சுரங்கத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் வகையில் கோரி கடிதம் எழுதியது ஏன்? இது மதுரை , மேலூர் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா?
திமுக பங்கு வகித்த முந்தைய UPA ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமங்களை வழங்கி, கனிம வளங்கள் முறையற்ற வகையில் இயற்கைக்கு மாறாக சுரண்டபட்டதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது , ஆதலால் தற்போதைய NDA அரசு கொண்டு வந்த கனிமவள திருத்த சட்ட விவாதத்தின் போது கனிமங்களுக்கான ஏலத்தை நடத்துவதுதன் முலமாக முறைகேடுகளை தடுக்கவும் ,மத்திய அரசிற்கு வருவாய் கிடைப்பதற்காகவும் மட்டுமே
திரு. தம்பிதுரை MP அவர்கள் தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நெய்வேலி சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்க விரிவாக்கத்திற்கான நில கையெடுப்பை மேற்கொள்வது தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிப்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார். இவை அனைத்தும் பாராளுமன்றப் பதிவில் உள்ள உண்மைகளாக இருக்க, திருச்சி சிவா திரித்து பேசுவது ஏன்?
இதே மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது, எந்த எதிர்ப்பையும் திமுக MP -க்கள் தெரிவிக்காமல் மவுனமாக கடந்தது ஏன்? திருச்சி சிவா இதற்கான விளக்கத்தை அளிப்பாரா?
கனிமவள திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு
மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் ,அவருடைய அருமை மைந்தர்
உதயநிதி ஸ்டாலினும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்த போதெல்லாம் , மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசாதது ஏன்?
இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா?